ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் :விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வீர வரலாறு

நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், சுதந்திரத்திற்காக புரட்சிப்படைகளுக்கு தலைமையேற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடத்தியவர் திண்டுக்கல் கோபால் நாயக்கர். அவரது வீர தீர செயல்கள் குறித்து பார்ப்போம். சுதந்திர…

நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், சுதந்திரத்திற்காக புரட்சிப்படைகளுக்கு தலைமையேற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடத்தியவர் திண்டுக்கல் கோபால் நாயக்கர். அவரது வீர தீர செயல்கள் குறித்து பார்ப்போம்.

சுதந்திர போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் இயற்பெயர் திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர். நாளடைவில் கோபால் நாயக்கர் என அழைக்கப்பட்டார். தற்போது வரை அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. கி.பி.1529ம் ஆண்டு மதுரை மண்ணை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தன் ஆட்சிப் பகுதிகளை 72 பாளையங்களாக பிரித்தார். அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி பாளையமும் ஒன்று. திருமலை சின்னப்ப நாயக்கர் தான் விருப்பாச்சியின் முதல் பாளையக்காரர் ஆவார். கோபால் நாயக்கர் 19ஆவது பாளையக்காரராக விருப்பாச்சி பாளையத்தில் பொறுப்பேற்றார்.

கோபால் நாயக்கருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், முத்துவேல் நாயக்கர், பொன்னப்ப நாயக்கர் என 2 மகன்களும் இருந்தனர். ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தை பல பாளையக்காரர்கள் எதிர்த்து தனித்தனியாக போராடியபோது, அவர்களோடு தென்னிந்திய அளவில் புரட்சிப் படையை ஒன்று சேர்த்து மாபெரும் சக்தியை உருவாக்கியதில் கோபால நாயக்கருக்கு முக்கிய பங்கு உண்டு.

தீபகற்ப கூட்டுப்படை என்ற அமைப்பின் தலைவராக இருந்த கோபால் நாயக்கர் நாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி அவர்களை நிலைகுலையச் செய்தார். அவரது இந்த வீரத்தைப் பாராட்டி மைசூர் திப்புசுல்தான் அவரது வீரவாளை கோபால நாயக்கருக்கு பரிசாக வழங்கினார், அது இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

12.10.1800-ல் கர்னல் இன்னசென்ட் பவன் என்பவர், விருப்பாச்சி பகுதியை முற்றுகையிட்டு கோபால் நாயக்கரின் அரண்மனையை தரைமட்டமாக்கினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கோபால் நாயக்கர் அங்கிருந்து தப்பிவிட்டார். அவருடைய மனைவி மற்றும் மகனை கைது செய்த ஆங்கிலேயர்கள் திண்டுக்கல்லில் அவர்களை சிறை வைத்தனர். இதற்கிடையே சில துரோகிகள் கோபால் நாயக்கரை காட்டிக் கொடுத்ததன் விளைவாக 1801 ம் ஆண்டு மே 4ம் தேதி அன்று அவர் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து செப்டம்பர் 5ம் தேதி கோபால் நாயக்கர் திண்டுக்கல் நகரில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். அவருடன் பிடிபட்ட சோமண்துறை, பெரியபட்டி நாகம நாயக்கர், தும்மச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரும் தூக்கிலிடப்பட்டனர். தீபகற்ப கூட்டுப்படை அமைப்பின் வீரதீரமிக்க தலைவராக விளங்கிய கோபால் நாயக்கரின் மறைவுக்கு பிறகு சில துரோகிகளால், அந்த அமைப்பும் மறைந்தது. 1700-1800ம் ஆண்டு காலகட்டத்தில், வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய கோபால் நாயக்கரின் பங்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதை வெளியுலகத்துக்கு பறைசாற்றும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணி மண்டபம் அமைத்துள்ளார். அவர் பயன்படுத்திய அரிய பொருட்களை காட்சிப்படுத்தி மணிமண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய திருநாட்டின் விடுதலைக்காக புரட்சிப்படைகளை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்திய கோபால் நாயக்கரின் வீரம், இந்த 75வது சுதந்திரதினத்தில் போற்றப்பட வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.