காளி பட சர்ச்சை காரணமாக பதியப்பட்ட பல்வேறு வழக்குகளால் பாட்டியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை என கனடாவில் இருக்கும் லீனா மணிமேகலை உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஆவண பட இயக்குனர் , தமிழ் கவிஞருமான லீனா மணிமேகலை சமீபத்தில் காளி என்னும் குறும்படத்தை இயக்கி அதன் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டர் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது நாடு முழுவதும் ஒன்பது எப்ஐஆர்களில் பதிவு செய்யப்பட்டது. இப்போது லீனா மணிமேகலை டொராண்டோவில் தங்கி உள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த அவரது பாட்டி இறந்து விட்டார்.

இது குறித்து உருக்கமாக முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்: ”நான் கனடா செல்வதற்கு முன் இந்த படத்தை ஒன்றாக எடுத்தோம். எனது ஆய்வறிக்கை படத்திற்காக அவளை நேர்காணல் செய்தேன். அவள் எனது பட்டமளிப்பு விழா மற்றும் எனது ஆய்வறிக்கை திரைப்படத்தின் அரங்கேற்றத்தில் கலந்து கொள்வேன் என்று உறுதியளித்தாள். ஆனால் வாழ்க்கை மீண்டும் கொடூரமானது என்பதை நிரூபிக்கிறது. அவ்வா, என் பாட்டி ராஜேஸ்வரி, மூச்சு நிறுத்திக் கொண்டார். எங்கள் குடும்பத்தின் பிணைப்பு சக்தி இவள். இரக்கம், அன்பு மற்றும் பொறுமையின் உறைவிடம். அவளை பிரியாவிடை முத்தமிட முடியாத போது நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்று புரியவில்லை. நான் டொராண்டோவில் மாட்டிக்கொண்டேன் ஏனெனில் நான் ஒரு “குற்றவாளி” என ஒன்பது எப்ஐஆர்களில் பதிவு செய்து விமான நிலையத்திலேயே என்னை கைது செய்ய “லுக் அவுட் சர்க்குலர்” வெளியிட்ட இந்திய அரசின் கூற்றுப்படி – எல்லாம் ஒரு திரைப்பட போஸ்டருக்காக. மூனு நாள் முன்னாடியே அவ்வா எங்க அம்மா கிட்ட சொல்லிட்டான், எல்லா கேஸ்சையும் நான் ஜெயிப்பேன் என்று. அவளுடனான எனது கடைசி வீடியோ அழைப்பில் அவள் “லவ் யூ, உம்மா” என்று முணுமுணுத்தாள். அவளின் விருப்பத்தை வாழ நான் உயிரோடு இருப்பேன். நான் காளி. காளியின் தாய் என் அவ்வா நம்மை தோற்கடிக்கலாம் ஆனால் அழிக்க முடியாது.” என்று பதிவிட்டிருக்கிறார்.
– பவானி பால்பாண்டி







