ஐபிஎல் தொடரின் நேற்றையை போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை – மும்பை போட்டியின் போது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை சென்னை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராமகிருஷ்ண கோஷ், கடந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணியால் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு, விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சென்னை மற்றும் மும்பைக்கெதிரான நேற்றைய போட்டியே ராமகிருஷ்ண கோஷின் முதல் ஐபிஎல் போட்டியாகும். இப்போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ராம்கிருஷ்ண கோஷ் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
நடப்பு தொடரில் சென்னை அணியின் முக்கிய பிரச்சனையாக இருப்பது வீரர்களின் உடல் நலம். தொடரின் முன்பே ஏற்பட்ட காயம் காரணமா நட்சத்திர பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் தொடரில் இருந்து விலகினார். அதே போல்சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி இது வரை நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதே போல தொடரில் சிறப்பாக செயல்பட்ட கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே ஆகியோரும் காயத்தால் அடுத்தடுத்து தொடரில் இருந்து விலகினர்.







