ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வோர்ல்டு விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க குழந்தைகளை விற்க தயாராக உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அந்நாட்டு மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதில் மிக முக்கியமானது, பொருளாதார நெருக்கடி. 20 ஆண்டுகளாக ஆப்கனிற்கு கொடுத்து வந்த ராணுவ பலம், நிதியுதவி என அனைத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமெரிக்கா நிறுத்தியது. இதனால் ஆப்கனின் பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் அனைவரும் கடும் வறுமைக்கு தள்ளப்பட்டனர். இதனால் 5 வயதுக்கு கீழ் உள்ள 32 லட்சம் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்தது.
தொடர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கன் மக்கள் தற்போது குடும்பங்களுக்கு உணவளிக்க தங்கள் குழந்தைகளை விற்கும் இன்னலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆப்கனில் வசிக்கும் ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு கூட தெரிவிக்காமல், 10 வயது பெண் குழந்தையை இன்னொருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக விற்று பணம் பெற்றுள்ளார். அதன் மூலம், அவரின் மற்ற 5 குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் உணவளித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வறுமையால் ஆப்கனில் உள்ள பல குடும்பங்கள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது எனவும், இதனால் அதிக பாதிப்புக்குள்ளாவது என்னவோ குழந்தைகள் தான் எனவும் வோர்ல்டு விஷன் உதவி அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இருந்து ஆப்கன் மக்களை மீட்க நிதியுதவிகள் அவசியம் தேவைப்படுகிறது எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.







