நாக்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர், அங்கு துப்பாகியுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த, நூர் முகமது என்ற அப்துல் ஹக் (30) என்பவர் எந்தவித ஆவணமும் இன்றி, தங்கியிருப்பது தெரிய வந்தது. திகோரி என்ற பகுதியில் சட்டவிரோதமாக, 10 வருடங் களாகத் தங்கியிருந்த அவரை கைது செய்த போலீசார், பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நாடு கடத்தினர்.
அவர் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததையும் அவருக்கு தலிபான்களுடன் தொடர்பு இருந்தையும் போலீசார், அறிந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்தனர்.
இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட அவர், ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் படையில் ஐக்கியமாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவர் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கும் அவர், நாடு கடத்தப்பட்ட அப்துல் ஹக்தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
‘நாங்களும் அந்த புகைப்படத்தை பார்த்தோம். 2 மாதத்துக்கு முன் நாடுகடத்தப்பட்ட அந்த நபர், அங்கு என்ன செய்கிறார் என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. புகைப் படத்துடன் இருப்பது அதே நபர்தானா என்பதும் தெரியவில்லை’ என்று நாக்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.








