முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைது

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட கைது செய்யபடவில்லை எனத் தெரிகிறது. ஏற்கனவே ஓபிஎஸை திமுகதான் பின்னால் இருந்து இயக்குகிறது என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி முன்வைத்த நிலையில், இந்த கைது விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கால் கிணற்றை தாண்டி விட்டதாகவே தெரிகிறது. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் ஒரு வலிமை வாய்ந்த தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்க முயலுவதாகவே தெரிகிறது. அந்த வரிசையில் அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.பன்னீர் செல்வத்தை பின்னால் இருந்து இயக்குவது திமுகதான் என்ற குற்றச்சாட்டை நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் முன் வைத்தார். மேலும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விட்ட அவர், தாம் பழைய பழைய பழனிசாமி என கருத வேண்டாம் என பஞ்ச் டயலாக் பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவை அழிக்க முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸை திமுக பயன்படுத்துகிறது என பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார். பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசிய சில மணிநேரங்களில் திமுக அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , திமுகவைப் பொறுத்தமட்டிலும்  அது யாருடைய அழிவிலும் இன்பம் காண்பதல்ல.

ஒரு பழமொழி சொல்வார்கள், ஒரு விரலை எதிரியை  நோக்கிக் காட்டும் போது மூன்று விரல்கள்  தன்னை நோக்கிக் காட்டுவதாக, அதுபோல இது,  அவர்களுக்குள் இருக்கும்  சண்டை, இதற்கும் திமுவிற்கும் எந்த விதமான சம்பந்தமும்  கிடையாது. அதனால் எடப்பாடி பழனிசாமி,   கோபப்படுவது வேறு யார் மீதோ என வினவினார். மேலும்,  ரெய்டு  இன்கம் டாக்ஸ் எங்கள் கையிலா இருக்குது, இன்கம்டாக்ஸ்  ஒன்றிய சர்க்கார் கையில் இருக்கிறது.

ஐ.டி. ரெய்டு எல்லாம்  யார் நடத்துவது?  ஒன்றிய அரசு தானே  நடத்துகிறது. அதனைக் கண்டித்துப்  பேசுவதற்கு  அவரால்   முடியவில்லை.

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பதைப்போல; எதற்கெடுத்தாலும்  தமிழகத்தின்  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும்,  திமுகவையும்  தாக்கிப் பேசுவது எடப்பாடிக்கு  வாடிக்கையாகி விட்டது.

அவர்கள்  கட்சிக்குள்  இருக்கும் பிரச்சினையை அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர் எப்படி இந்தப் பொதுக்குழுவை நடத்தினார்; செயற்குழுவைக் கூட்டினார் என்பது எல்லோருக்கும்  பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ஜெயலலிதா காலத்திலும், எம்.ஜி.ஆர். காலத்திலும்  பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தின் போது பல்வேறு ஸ்டார் ஓட்டல்களில்  தங்க வைத்து இருக்கிறார்களா? சென்னையில் ரெண்டு மூன்று  நாட்களாக  பல ஸ்டார் ஓட்டல்களில்  இடமே  கிடைக்கவில்லை. மொத்த இடங்களையும் யார் புக் செய்தார்கள் என்றால்,  பத்திரிகையாளர்களே நீங்கள் போய்  யார் புக் செய்தார்கள், என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.  மொத்தமே  எடப்பாடி கம்பெனிதான் பில் கட்டி இருக்கு.  பல கோடி செலவு செய்து பொதுக்குழுவைக் கூட்டி  இருக்கிறார். அதைப்பற்றி நாங்கள் விமர்சனம் செய்யவில்லை.   அது அவருடைய  திறமை. அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், வீணாக, திமுகவை வம்புக்கு இழுக்கக் கூடாது.  திமுகவுக்கும், அவர்களுடைய  பொதுக்குழுவுக்கும் என்ன சம்பந்தம் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,சட்டம்  ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு, எங்கே பாதிக்கப்பட்டது. ஓபிஎஸ்  அலுவலகத்திற்கு செல்கிறார். அவர் சென்ற உடனேயே சிலர் கல் எறிகிறார்கள், உடனே 144 தடை சட்டம் போட்டு சட்டம்  -ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காவல் துறை வழக்கை எடுக்கிறார்கள். 144 போட வேண்டிய கட்டாயம். காரணம் என்ன வென்றால்  எப்போதுமே  இரண்டு பேர் ஒரு சொத்து மீது உரிமை கொண்டாடும்போது ஆர்.டி.ஓ.வுக்கு தான் அந்த பவர் இருக்கிறது.  அதனால் அவர் இந்த உத்தரவு போட்டு இருக்கிறார்.

ஏன் அவருக்கு நம்பிக்கை  இல்லையா, நீதிமன்றத்துக்குச் சென்று பொதுக்குழு வழக்கில்  வெற்றி பெற்றது போல, நீதிமன்றத்துக்கு போய்  வழக்குப் போட்டு – இரவு 12 மணிக்கு கூட நீதிமன்றம் விசாரித்து விடியற்காலை  4 மணிக்கெல்லாம் தீர்ப்பு சொல்கிறார்கள். அதே போல்  இன்றைக்குத்தான் அரசு சீல் வைத்து இருக்கிறது, கோர்ட்டுக்கு அவர் போய் இருக்கலாம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும்போது அரசால் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்திருக்கிறது.

அவர் முதலமைச்சராக வேறு இருந்திருக்கிறார். போலீஸ் எங்கே, எப்போ, எங்கே  தலையிட வேண்டும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? நடிக்கிறார், அவர் ஏமாந்துவிட்டார். அவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு  9 மணிக்கு  வரும் வரும்போது ஓ.பி.எஸ். அங்கே போய்  இருப்பார் என்று தெரிந்து இருந்தால் அவர்  அங்கே கூடிய கூட்டத்தின் ஒரு பாதியை  இங்கே அனுப்பி இருப்பார் அவர்.  ஏமாந்து விட்டு விட்டு எங்கள் மீது பழியைச் சொல்கிறார் என்றார்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக ராயபேட்டை காவல்நிலையத்தில் 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பிரிவுகளான ஐபிசி 147,148,341,324,353, 336 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் விபரம் ;

1) பாலசந்திரன்

ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர்

2) B.V சீனிவாசன்

திருவல்லிக்கேணி பகுதி செயலாளர்

3) கார்டன் செந்தில்

171 வடக்கு வட்ட கழக செயலாளர்

4) தினேஷ்

மைலாப்பூர் பகுதி இணை செயலாளர்

5) மார்கெட் சுந்தர்

113ஆவது வட்ட உறுப்பினர்

6) கார்த்திக்

சேப்பாக்கம் மாவட்ட பிரதிநிதி

7) முரளிகிருஷ்ணன்

120வது கிழக்கு வட்ட கழக துணை செயலாளர்

8) விநாயகமூர்த்தி

விருகம்பாக்கம் வடக்கு பகுதி கழக பொருளாளர்

9) செல்வம்

128வது வட்ட அவை தலைவர்

10) கோபிநாத் (எ)லோகேஷ்

திருவல்லிக்கேணி இளைஞர் பாசறை துணை செயலாளர்

11) பாபு

112 வது வட்ட மேலவை பிரதிநிதி

12) குட்டி

112ஆவது வட்ட அவை தலைவர்

13) வின்சென்ட் ராஜ்

120ஆவது மேற்கு வட்ட கழக செயலாளர்

14) சால்னா சேகர்

111வது வட்ட கழக செயலாளர்

காவல்துறை கைது செய்துள்ள ஒருவர் கூட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இல்லை. அனைவரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ளனர். இதில் இருந்தே தெரிகிறது காவல்துறை ஒரு தலைபட்சமாக நடக்கிறது என அதிமுக இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்ட்டுகின்றனர். காவல்துறை தரப்பில் விசாரித்தவரை கைது நடவடிக்கை இன்னமும் முழுமை அடையவில்லை. விரைவில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என்கின்றனர். இதனால் அதிமுக உட்கட்சி விவகாரம் திசை மாறி திமுகவை எதிர்க்க வலுவான தலைவர் என்ற கோட்டில் பயணிக்கிறது.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!

தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி

EZHILARASAN D

சாவர்க்கர் பெயரை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

Dinesh A