ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜய் சொல்வது சரிதான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த சனிக்கிழமை பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரை மாணவர்கள் வாசிக்க வேண்டும் எனவும், வாக்களிக்கும்போது பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க கூடாது எனவும் மாணவர்களிடம் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அடுத்த தலைமுறை வாக்காளர்களான மாணவர்களிடம் நீண்ட அரசியல் உரையை நிகழ்த்திய நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரின் அரசியல் வருகைக்க திரையுலகை சார்ந்தவர்களும், அவரது ரசிகர்களும் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமமுக செயற்குழு கூட்டம் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அமமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இதில் கட்சி வளர்ச்சிப் பணிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் செயற்குழு கூட்டத்தில் அமமுகவில் அமைப்புரீதியான 9 தீர்மானங்கள் அமமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர், பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் நல்ல கருத்தை எடுத்து சொல்வதை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொல்வது சரிதான். விஜய் இத்தகைய விஷயத்தை சொல்வது நிறைய மக்களை சென்றடையும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








