தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. இவர் பிரபல தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ’குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகைகள் ஸ்ரீலீலா, பூஜா ஹக்டே, நடிகர் ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்ததாக கூறப்பட்டது.
நடிகர் மகேஷ் பாபுவுடன் ஏற்கனவே மகரிஷி உள்ளிட்ட படங்களில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது ‘குண்டூர் காரம்’ படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதை தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் மகேஷ்பாபுவிற்கு படத்தின் டைட்டில் அறிமுக வீடியோவில் தமனின் இசை பிடிக்காமல் போனதால் இசையமைப்பாளர் தமன் படத்திலிருந்து விலக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தமனிற்கு பதிலாக அனிருத் இசையமைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.







