ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஆசீர்வாத சகோதரர் சபை என்ற தேவாலயத்தில் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக போதகரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் ஆசிர்வாத சகோதர சபை என்ற பெயரில் தேவாலயம் உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் ஜோஸ்வா என்பவர் போதகராக இருந்து வருகின்றார்.
இவர் அங்குள்ள பெண்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு திருமணத்திற்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறினார். கர்ப்பிணியின் செல்போனுக்கு குழந்தை குறித்த தவறான பாலியல் சீண்டல்களை குறுஞ்செய்திகளாக அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர்.
கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்கொண்ட தீவிர விசாரணையில் போதகர் கர்ப்பிணிக்கு 14 வயதிலிருந்தே பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







