“மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு…

“Action will be taken against those who spread the photo and FIR copy of the student abuse case” - Police Commissioner Arun Kumar warns!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார்.

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச. 24) இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நேற்று (டிச. 25) கோட்டூர்புரம் பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் கைது செய்த ஞானசேகரன் (37) கோட்டூர்புரம் சாலை பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் என்றும், இரவில் பணியை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து, போலீஸ் எனக்கூறி மிரட்டி, மாணவிகளிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

ஞானசேகரன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவாகியுள்ளன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஞானசேகரன் கைதை தொடர்ந்து இந்த பாலியல் குற்ற செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஞானசேகரனை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது தப்பியோட முயன்றுள்ளார் என்றும், அப்போது அவர் கிழே தவறி விழுந்து இடது கை மற்றும் இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது. அதன் பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக ஜனவரி 8-ம் தேதி வரையில் (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்குமார் ஐபிஎஸ் பாலியல் விவகாரம் குறித்து பெண்ணின் பெயரோ புகைப்படமோ, பாலியல் வழக்கு பதிவான எஃப்ஐஆர் நகலையோ முழுமையாக வெளியிட கூடாது என விளக்கம் அளித்துள்ளார். அவ்வாறு யாராவது பதிவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.