தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,000 சிறப்பு பேருந்துகள்
இயக்கப்படுவதாகவும், பேருந்து கட்டணத்தை உயர்த்தி, போக்குவரத்து விதிகளை
மீறும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அழகுமலையில் உள்ள தனியார் பள்ளியின்
ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
கலந்து கொண்டு மாவட்ட,மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..
“வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சென்னையின் 5 பகுதிகளிலிருந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை முடிந்த பின்பும் சென்னை கோவை திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அவரவர் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் சங்கத்திடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். போக்குவரத்து துறை ஆணையாளர் மூலம் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் கட்டணங்களை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடக்க எடுக்கப்படும். இதற்காக தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆம்னி பேருந்துகளை சோதனை மேற்கொள்வார்கள்.” என தெரிவித்தார்







