அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஒட்டி பெரிய ஸ்டார் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.…

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஒட்டி பெரிய ஸ்டார் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த சமயங்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான சிங்கம்-3, பைரவா பட வெளியீட்டின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தொடரப்பட்டது. இதுதொடர்பாக மனுதாரர் தரப்பில் அளிக்கப்படிருந்த மனுவில் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குளில், சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனையும் படியுங்கள்: “மயக்கமென்ன… இந்த மவுனமென்ன…”

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வருவாய் நிர்வாக ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு , கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும். அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து சிங்கம்-3, பைரவா பட வெளியீட்டின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கை  முடித்து வைத்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.