சென்னை வேளச்சேரி இல்லத்திலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் இணையதளம் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. உயர்நிலைக் குழுவில் இன்றைய அரசியல் நெருக்கடிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.
முன்னணி நிர்வாகிகளோடு ஆலோசிக்க வேண்டும் என இதற்கு முன்பாகவே தெரிவித்திருந்தோம். அந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறும். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் நாங்கள் ஆலோசனை மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான்.
கட்சியின் தலைவர் என்ற அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டிருந்தாலுமே நிர்வாகிகளுடன் ஆலோசனை, நிர்வாகிகளை மதிப்பது என்னுடைய பொறுப்பு, கடமை. தமிழ்நாடு முழுதும் முக்கிய நிர்வாகிகள் இருப்பார்கள். அவர்கள் உடனடியாக வர முடியாது. அதனால் தான் மாலை 5 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். கலந்து ஆலோசிக்காமல் நான் கூட்டணிக் குறித்து முடிவெடுக்க முடியாது. எங்களுடைய நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாமல் நானே ஒரு முடிவை எடுக்க முடியாது.
நாளை காலை விசிக சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும், உயர்நிலைக் குழு முடிவை அறிவிப்போம். கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் நேற்று முன்னாள் முதலமைச்சரை சந்தித்து பேசினோம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம், மக்களுடைய தீர்ப்புக்கு நான் தலை வணங்குவேன். நாங்கள் இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.







