“மயக்கமென்ன… இந்த மவுனமென்ன…”

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் பல ஆண்டுகளாக மனதில் ரிங்டோனாய் ஒலிக்கிறது. பழைய திரைப்பட பாடல்களை இன்றளவும் கேட்டு மகிழும் நிலையில் நேற்று வந்த பாடல்கள் நினைவில் நிற்பதில்லை.…

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் பல ஆண்டுகளாக மனதில் ரிங்டோனாய் ஒலிக்கிறது. பழைய திரைப்பட பாடல்களை இன்றளவும் கேட்டு மகிழும் நிலையில் நேற்று வந்த பாடல்கள் நினைவில் நிற்பதில்லை. ஏன் என அலசுகிறது இந்த கட்டுரை.

செவியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த சில பாடல் வரிகள் மறக்காமல் இருக்க என்ன காரணம்?.. நேற்று வந்த ஒரு சில பாடல்கள் மட்டுமே மனதுக்குள் ரீங்காரமிட என்ன காரணம்?… இலக்கியத்தை கற்றுத் தோய்ந்து அதில் மூழ்கி எழுதப்பட்ட வரிகள் இன்றும் இனிக்கின்றன. பாடல் வரிகள் நம்மை ஈர்க்கின்றன.

இதற்கு காரணம் வேறொன்றுமல்ல இலக்கியம்தான். தொன்மை வாய்ந்த தமிழ் நூல்கள் முதல் நாட்டு பாடல்கள் வரை படித்து, காதலுக்கும் கவலைக்கும், இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வரிகளை கையாண்ட கவியரசர் கண்ணதாசன் தனது பாடல்களுக்கு கம்பராமாயணத்கையும், மகாபாரத்தையும் துணைக்கு அழைத்து வருகிறார்.
ராமாயணத்தில் ஒரு காட்சியை காண்கிறார் கண்ணதாசன், அசோகவனத்தில் சிறை இருந்த சீதையை கண்ட அனுமன், ராமனிடம் கூற சேதி ஏதாவது உள்ளதா என்று கேட்கிறான்.

சீதை குறிப்பாக ஒரு செய்தியை கூறுகிறாள்.

“வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்!”

மிதிலைக்கு வந்து என் கைகளை பற்றிய அந்த நேரத்தில் இந்தப் பிறவியில் இரு பெண்களை மனதாலும் தொட மாட்டேன், எனக் கூறி சிறந்த வரம் தந்ததை அவருடைய செவிகளில் சாற்றுவாய் என்கிறாள் சீதை. திருமணம் முடிந்த கையோடு சீதையை கரம் பிடித்தபடி காட்டுக்குள் தம்பி இலக்குவனுடன் செல்லும்போது கூறிய ராமன் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நான் மனதினால் கூட நினைக்க மாட்டேன் என உத்தம புருஷனாக இருப்பேன் என சீதைக்கு உத்தரவாதம் தருகிறான் ராமன்.

கம்பராமாயணத்தில் கம்பனின் கற்பனை சிறகில் உதித்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட கண்ணதாசன். கம்பன் கண்ட அந்த வார்த்தைகளை அச்சு பிறழாமல் அதே பொருளில் எளிய தமிழில் தருகிறார். வசந்த மாளிகை திரைப்படத்தில் இடம் பெற்ற மயக்கம் என்ன, இந்த மவுனமென்ன பாடலில் “உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்” என கதாநாயகன் பாடுவதை போல் எழுதி இருக்கிறார் கண்ணதாசன். மயக்கம் என்ன பாடல் இன்றளவும் நம்மை மயக்கி வருவதற்கு காரணம் தெரிகிறதா?

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.