போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு ஏழு கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான பொங்கல் பண்டிகை சாதனை ஊக்கத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க போக்குவரத்து கழகங்களில் கடந்த ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதம் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி 1 லட்சத்து பதினேழாயிரத்து நூற்று இருபத்தொன்பது பணியாளர்களுக்கு, மொத்தம் ஏழு கோடியே ஒரு இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







