மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள்  தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். தென்னக இரயில்வே மதுரை…

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள்  தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர்.

தென்னக இரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில்  தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை ஒப்பந்த பணியாளர்களை கைகளால் மலம் அள்ள வைப்பதாக வீடியோ ஆதாரத்துடன் ஒப்பந்த பணியாளர் காதர் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

” ரயில்வேயில் ஊதியம் குறைவாக கொடுப்பதாக ஒப்பந்த பணியாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவு ஈட்டுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள போனசை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளேன்

ரயில்வேயில் கைகளால் மலம் அள்ளுவது தடை செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கைகளால் மலம் அள்ளுவது தொடர்பான வீடியோ ஒன்றை பார்த்தேன். கைகளால் மலம் அள்ளுவது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். உண்மை இருக்கும் பட்சத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஒப்பந்தகாரர் மீது வழக்கு பதியப்படும்.

மலக்குழி மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 1993லிருந்து 2023 வரை தமிழகத்தில் 30 ஆண்டுகளில் விஷவாயு தாக்கி 225 பேர் உயிரிழந்துள்ளனர். விஷவாயு தாக்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உயிரை பணயம் வைத்து தொழிலாளர்கள் மலக்குழிகளுக்குள் இறங்க கூடாது.

தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் போல தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆணையம் அமைக்க வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் மாநில தூய்மை பணியாளர்கள் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது” என வெங்கடேசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.