தரமான கல்வி அளிப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ”சிற்பி” திட்டத்தின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ், சேகர் பாபு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிற்பி திட்டத்தில் பங்கேற்ற ஐந்தாயிரம் மாணவர்களில் ஐந்து பேருக்கு முதலமைச்சர் சான்றுகள் வழங்கி கௌரவித்தார்
இதனைத் தொடர்ந்துமேடையில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
”நாட்டின் எதிர்காலமாக இருக்கக்கூடிய மாணவர்கள் கையில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டின் முக்கியமான சாதனை காலை சிற்றுண்டி திட்டம்தான். பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு, பிறகுதான் வகுப்புகள். மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கினால் அறிவு பசி கிடைத்துவிடும். இதுபோன்ற திட்டங்களால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தற்போது பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், வினாடி வினா போட்டிகள், மாணவர்களுக்காக ஆலோசனை பெட்டி, டிஜிட்டல் செயலி போன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. அந்த வகையில் சிற்பி திட்டம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒழுக்கத்தில் நன்றாக விளங்க வேண்டும் என்பதற்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவாலால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு செல்லும் போது தான் இந்த பயிற்சியை வழங்குவார்கள். ஆனால் தற்போது சிறு வயதிலேயே மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறார் குற்றங்களை கட்டுப்படுத்தும் பணியில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம். இளைஞர்களை சீர்படுத்தினாலே எதிர்காலத்தை சீர்படுத்த முடியும். இந்தியாவில் தரமான கல்வி அளிப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது
இங்கே வந்திருக்கும் மாணவர்கள் பள்ளியுடன் தங்களது கல்வியை முடித்துக் கொள்ளாமல் கல்லூரிக்கும் செல்ல வேண்டும். படிப்பு மட்டும் தான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் இருக்கிறேன் நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். இன்று உலக போதை ஒழிப்பு நாள். மாணவர்களாகிய நீங்கள் போதை பழக்கத்தில் ஈடுபடக்கூடாது, மேலும் உங்கள் நண்பர்களையும் போதை பழக்கத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது. மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







