முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதையடுத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதியளிக்காது. எல்லோரையும்விட இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என்று தெரிவித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பகுதியில், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சருக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: