காதல் பிரச்னையால், மனநலம் பாதிக்கப்பட்டு, நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர், முகநூல் மூலமாக குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆனந்தம் (45) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவில் பகுதிகளில் கேட்பாரற்று சுற்றித் திரிந்து வந்துள்ளார்.
மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சுற்றித் திரியும் இவருக்கு அப்பகுதியினர் உணவளித்து வந்தனர். கொரானோ தடை உத்தரவு காலங்களில் தினேஷ் என்பவர், வெளியூர் நபர்கள் பலருக்கு உணவு வழங்கினார். அதில் ஆனந்தும் ஒருவர். சமீபத்தில் ஆனந்த் உணவுப் பெற்ற புகைப்படம் முகநூலில் தினேஷ் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த ஆனந்தத்தின் உறவினர்கள் உடனடியாக தினேஷை தொடர்புகொண்டு நாகர்கோவில் வந்து அவரைச் சந்தித்தனர். அப்போது ஆனந்தம் கிழிந்த ஆடையுடன் மிகவும் பரிதாபமாக இருந்தார். மகனின் நிலைமையை பார்த்து அவருடைய தாயார் கண்ணீர் வடித்தார். இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மகனைப் பார்த்த அவர் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இதனையடுத்து ஆனந்தத்தை உடனடியாக எஸ்.பி. அலுவலகம் பின்புறம் குளிக்க வைத்து புது ஆடைகள் அணிவித்து அவரை, குடும்பத்தினர் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். ஆனந்தம், புதுச்சேரியில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் வசதி இல்லாத காரணத்தால் அப்பெண்ணின் பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
இது தொடர்பாக பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆனந்தம் பேசியபோது அவரது உறவினர்கள் ஆனந்தம் தலையில் தாக்கியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனந்தமை அவரது தாய் மற்றும் உறவினர்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நாகர்கோவில் போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள போலீசார் பெரிதும் உதவி செய்தனர்.







