தமிழகத்தில் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆளுநரை, திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இபிஎஸ் ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, வரும் தேர்தல்களில் தீய சக்தி என்ற அடையாளம் காட்டப்பட்டுள்ள திமுகவை ஓர் அணியில் திரண்டு வென்று காட்டுவோம் என்பதை சோல்லிக்கொள்கிறேன்.
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதை நோக்கி கட்சியை வலுப்படுத்தவும், தமிழ்நாடு முழுதும் பூத் கமிட்டி அமைக்கவும் பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் சென்று அமைப்பை பலப்படுத்தும் வேலையை தற்போது செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுதான் எங்களுடைய கருத்தும் கூட. ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவை பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை நிரூபிப்போம்.
தமிழ்நாடு ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார், இது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது, எனவே மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுவதோடு, தமிழ்நாடு மக்கள் அனைவரும் வருத்தப்படும் விதத்தில் அவர் பேசுகிறார். மத்திய அரசுக்கு தமிழகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதால் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.