ஆடிக் கிருத்திகை; முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு – நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்…

ஆடிக் கிருத்திகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை வடபழனியில்…

ஆடிக் கிருத்திகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுப்பிரமணிய சுவாமியை வழிப்பட்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4-00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பால்குடம் எடுத்தும் காவடி சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு, சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடத்துடன் பாத யாத்திரை சென்றனர். நகரத்தார் பாத யாத்திரை டிரஸ்ட் சார்பில் பாத யாத்திரை மேற்கொண்ட அவர்கள் காவடி சுமந்துவந்து பால சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். அதன்பின் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தையும் தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பார்சனபல்லி சென்னப்பமலை சுப்பிரமணியர் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர்காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலய வளாகத்தில் மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் காவடிகளுக்குப் பூஜை செய்து, பம்பை ஒலி எழுப்பி, அதனை சிறைமலை முருகன் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா விமர்சையாக நடைபெற்றது. மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் தரிசனம் செய்யும் வகையில் விஐபி தரிசனம் செய்யப்பட்டதாக கூறினார். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அண்ணாமலையார் கோயிலில் உள்ள பழனி ஆண்டவர் ஆலயம் மற்றும் அருணகிரிநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் ஆடி கார்த்திகை பெருவிழாவையொட்டி அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் சுவாமிநாத சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பச்சைமலை பாலமுருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி 180 படிகள் ஏறி இரண்டு மாடுகள் தரிசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடிக் கிருத்திகையையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு புதுச்சேரி கௌசிக பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரயில் நிலையம் அருகே உள்ள இந்தக் கோயிலில், முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

அச்சிறுப்பாக்கம் அருகே மரகத தண்டாயுதபாணி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 108 பால்குடங்களுடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கருணை மரகத தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் 39ம் ஆண்டு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆறுமுகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், வீணை, பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மேற்குராஜ வீதியில் அமைந்துள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் வந்த பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு மேற்கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.