ஜெயிலரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் – மாவீரன்!

ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்தை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி…

ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்தை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சரிதா, அதிதி ஷங்கர், யோகி பாபு, சுனில், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த  படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.  இந்தப் படம் தமிழில் மாவீரன் என்ற பெயரிலும் தெலுங்கில் மஹாவீரடு என்ற பெயரிலும் வெளியானது.

பத்திரிகையில் கார்டூன் வரையும் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். எந்த ஒரு பிரச்னைக்கும் செல்லாமல் அமைதியாக வாழ விரும்பும் சத்யா தனக்கு மட்டும் கேட்கும் ஒரு மனக்குரலின் பிடியில் மாட்டிகொண்டு வெளிவருவதே படத்தின் கதை.

படத்தை பார்த்த பல ரசிகர்கள் படம் முழுக்க சிரிப்பு வெடிகளாக உள்ளதாகவும் கொடுத்த காசுக்கு நல்ல படத்தை பார்த்த உணர்வு இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மேலும், படத்தின் முதல் பாதி போனதே தெரியவில்லை என்றும் இரண்டாம் பாதி சற்றே நீளமாக இருப்பதாகவும் கூறினர்.

சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இதனால் விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுக்க தொடங்கினர். முதல்நாள் வசூலாக ரூ10.2 கோடி எனக் கூறப்பட்டது. இப்படம் வெளியான 11 நாள்களில் உலகளவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு  நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது இந்த படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்த நிலையில், ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாவீரன் படத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன், மிகவும் பரபரப்பான சூழலில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த, பணிகளுக்கு மத்தியில் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதை தெரிவித்து நெகிழ்ந்தார்.

மேலும் நாளை ஜெயிலர் படம் வெளியாவதை குறிப்பிட்டு தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நாள் என்றும், அதற்காக உலகமே காத்திருப்பதாகவும் கூறிய அவர், இதுபோல என்றும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும், உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று கூறி வீடியோவை நிறைவு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.