காதலியுடன் ஊர் சுற்ற சகோதரரின் நகைக்கடையில் கைவரிசை காட்டிய இளைஞர்… ஒரு கிலோ தங்கத்துடன் தலைமறைவானவர் கைது… நடந்தது என்ன…? குற்றவாளி சிக்கியது எப்படி…?
சென்னை ஓட்டேரி பட்டாளம் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் ஜெயின் தன்னுடைய சகோதரர்களான நரேந்தர் ஜெயின், வினோத் ஜெயின் ஆகியோருடன் சேர்ந்து சவுகார்பேட்டை என்.எஸ்.சி. சாலையில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். ஜூன் 3-ம் தேதி யோகேஷ் ஜெயின் கடையை திறக்க வந்த போது கடையில் வைத்திருந்த 1 கிலோ தங்க நகை மற்றும் 15 லட்சம் ரொக்கப்பணத்தை காணாமல் திடுக்கிட்டார். இதுகுறித்து யானை கவுனி காவல் நிலையத்தில் யோகேஷ் ஜெயின் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்தபோது கடையில் யாரும் கொள்ளையடிக்கவில்லை என்பது உறுதியானது. கடையில் வைத்திருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் கடையில் வைத்திருந்த நகைகளை ஒருவர் திருடி பையில் வைத்து கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கடையில் திருடியவர் யார் என விசாரித்தபோது கடை உரிமையாளர் யோகேஷ் ஜெயினின் இளைய சகோதரரான வினோத் ஜெயின் தான் நகைகளை திருடிச் செல்வது தெரிய வந்தது.
நகைகளுடன் வினோத் ஜெயின் தலைமறைவாகிவிட்டதால் போலீசார் செல்போன் மூலம் தேடிய போது பெங்களூருவில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். தனிப்படை போலீசார் பெங்களூருவுக்குச் சென்று வினோத் ஜெயினை கைது செய்தனர். வினோத் ஜெயினுடன் அவரது பெண் தோழியும் தங்கி இருந்தார்.
வினோத்தை கைது செய்து விசாரித்தபோது, கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். பெண் தோழியுடன் ஊர் சுற்றுவதற்காக தங்கள் குடும்ப கடையிலேயே 1 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக வினோத் ஜெயின் கூறினார். கைதான வினோத் ஜெயின் தான் ஒரு கிலோ தங்க நகைகளையும், 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மட்டுமே திருடிச் சென்றிருப்பதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டு போயிருப்பதாக புகார் கொடுத்த நிலையில் 3 லட்சம் மட்டுமே எடுத்துச் சென்றதாக வினோத் ஜெயின் கூறியிருப்பதால் மீதி பணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பும் வினோத் ஜெயின் தன்னுடைய கடையில் கைவரிசை காட்டிவிட்டு பின்னர் சில வாரங்கள் கழித்து வீடு திரும்பியதும் விசாரணையில் தெரியவந்தது.









