புதுச்சேரியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் சான்றிதழ்களை சட்டப்பேரவை வளாகத்திற்க்குள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். 29 வயதான இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பதக்கம் வென்றுள்ளார். இவர் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்த்தியில் இருந்த சத்யராஜ் இன்று காலை சட்டப்பேரவை வளாக வாயிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து தன்னுடைய 12ஆம் வகுப்பு மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றை சட்டப் பேரவைக்குள் வீசி எறிந்து விட்டு இதெல்லாம் ஒரு அரசாங்கமா என ஆத்திரத்துடன் கூச்சலிட்டார். அப்போது பேரவை காவலர்கள் அவருடைய சான்றிதழை எடுத்துக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் எதையும் காதில் வாங்காமல், சத்யராஜ் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருந்ததால் சபை காவலர்கள் பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்யராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளனர். மேலும் இளைஞர் ஒருவர் சட்டப்பேரவை வாயிலில் தனது சான்றிதழ் தூக்கி எறிந்து கூச்சலிட்ட சம்பவம் பேரவை வளாக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பி.ஜேம்ஸ் லிசா








