லியோ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், மீண்டும் சில காட்சிகள் எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாகவும், லியோ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யாப், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதனால் படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பல்வேறு அப்டேட்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி வந்த வண்ணம் உள்ளது.
இந்த திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவால் தமிழ் திரையுலகமே நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாளை கொண்டாடியது என்றே கூறலாம்.
இந்நிலையில், லியோ படத்திற்காக மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. லியோ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லியோ படத்தின் கதையை கைதி – 2 படத்தின் கதையுடன் இணைந்து உருவாக உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.







