முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்


வரலாறு சுரேஷ்

கட்டுரையாளர்

அரசியலில் நேர் எதிராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வி.கே.சசிகலாவும், ஒரே இடத்தில் முகாமிட்டது, தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு சென்றார். ஆனால், அவருக்கு பிறகு, பிரிந்திருந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து, ஆட்சியை வழி நடத்தினர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அத்துடன் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் செயல்பட்டனர்.

இந்நிலையில்தான், 2021 சட்டமன்றத்தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார். ஆனால், “சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை” என்று வரிந்துக்கட்டிக்கொண்டு கருத்து தெரிவித்தனர் அதிமுக மூத்த தலைவர்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்ற சசிகலா, சிறையிலிருந்து விடுதலையான பிறகு, அந்த சத்தியத்தை நிறைவேற்றும் வகையில், அரசியலில் களமிறங்குவார் என்றெல்லாம், அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” என்று கூறி, அரசியல் பேச்சுக்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஓய்வெடுக்க சென்றார் சசிகலா. ஆனால், அது அத்தோடு முடிந்துவிடவில்லை.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து, கட்சித்தொண்டர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி வந்த சசிகலா, “யாரும் கவலைப்படாதீங்க…..” “நான் மீண்டும் வந்துவிடுவேன்…” “நான் உங்க எல்லாரையும் விரைவில் சந்திப்பேன்” என்றெல்லாம் பேசிவந்த சசிகலா, விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தது, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்தான், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுசூதனன் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலாவந்த நிலையில், அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா மருத்துவமனைக்கு வந்து சென்றிருப்பது, பேசு பொருளாகியுள்ளது.

அப்போலோ மருத்துவமனைக்கு சசிகலா சென்ற சில நிமிட நேரத்துக்கு முன்பாகத்தான், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனையில் இருக்கும்போது, சசிகலாவும் மருத்துவமனைக்கு சென்றது, பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.

ஆனால், சசிகலாவை பார்ப்பதை தவிர்த்து, வேறு வழியாக புறப்பட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி…அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை “ என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெயக்குமாரோ விமர்சிக்க, கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் மதுசூதனனை பார்க்க, இபிஎஸ் மருத்துவமனைக்கு சென்றதாகவும், அதற்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, விளக்கமளிக்கிறார் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்.

எவ்வளவு முயற்சித்தாலும் சசிகலாவால் அதிமுகவுக்குள் செல்ல முடியாது என்றும் சசிகலா கட்சிக்குள் வருவதற்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டார்கள் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. சசிகலா கட்சிக்குள் மீண்டும் வருகிறாரா? இல்லையா? என்பதையெல்லாம் தாண்டி, தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த நிகழ்வு விவாதத்திற்கு வித்திட்டது என்றால் மாற்றுக்கருத்தில்லை.

Advertisement:
SHARE

Related posts

திடீரென வெடித்துச் சிதறிய ’இயர்போன்’: இளைஞர் பரிதாப பலி

Gayathri Venkatesan

கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

சிகரம் தொட்ட சிங்கப்பெண் பிரியங்கா மங்கேஷ்!

எல்.ரேணுகாதேவி