பெகாசஸ் உளவு சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் யாரையும் உளவு பார்க்கவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனமே கூறிய நிலையில், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என யாரையும் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனமே கூறிய நிலையில், வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்குவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இஸ்ரேல் நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகாசஸ் என்ற உளவு செயலி அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பது என்று அந்நாடு முடிவு செய்திருக்கிறது. அந்த செயலி இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது என்று 2019 ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுபோல பல நாடுகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையொட்டி உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கெனத் தனியே புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டன. அதனடிப்படையில் இப்பொழுது சுமார் 50,000 தொலைபேசி எண்கள் பெகாசுஸ் செயலியால் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. 10 நாடுகளில் இத்தகைய உளவு செயலியை அரசாங்கங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று என்ற அதிர்ச்சி தரும் தகவலை ஊடக நிறுவனங்கள் கூட்டாக வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








