சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி சென்ற தனியார் பேருந்து திருக்குவளை அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது. இன்று காலை திருக்குவளை அடுத்த ஈசனுார் சீறாவட்டம் பாலம் அருகே பேருந்து அதிவேகமாக சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. பேருந்து சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
உடனே அப்பகுதி மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பேருந்து மீது ஏறி பயணிகளை மீட்டனர். பேருந்தில் பயணித்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்களுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரை திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து கிரேன் மற்றும் மீட்பு ஊர்தி உதவியுடன் பேருந்து மீட்கும் பணி நடைபெற்றது.
இதனால் நாகை – திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
—-அனகா காளமேகன்







