தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 12-வது கூட்டம் தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு கூடியது. ஆட்சியில் 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கும் நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் 1 மணி நேரம் நடைபெற்றது.

துறைவாரியாக சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கினார். அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றதுடன், புதிய சட்டங்கள், விதிமுறைகளை கொண்டு வரும்போது விரிவான ஆலோசனை, கருத்துகளை கேட்ட பின்பே சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

களஆய்வுகள், முதலமைச்சரின் தகவல் பலகை மூலம் பெற்ற கருத்துக்கள் அடிப்படையில் துறைகளின் நிலை, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த தனது கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான பணிகள் குறித்த அறிவுறுத்தல்களுடன், முதலமைச்சரின் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கான பயணத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோனஸ், கெட்டர்பில்லர் உள்ளிட்ட 5 பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

21.4.2023-ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்தச் சட்டமுன்வடிவு திரும்பப்பெறுவது, பெரிய தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக நியமனம், 6-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளில் மாற்றம், 2 அல்லது 3 அமைச்சர்களை விடுவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் ஆவடி நாசர், காந்தி, மா.சுப்பிரமணியன், சிவசங்கர், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர்களின் துறைகளை நிர்வாக வசதிக்காக மாற்றவும், டி.ஆர்.பி. ராஜா, மதியழகன், ஈ.ராஜா உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கவும் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.