“தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலநிலை நிலவுவதாகவும், முதல்வர் விஜய்யின் ‘தவெக’ ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு சென்றுவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில், காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து, குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள். அடிப்படை நிர்வாகத் திறனும் அரசியல் முதிர்ச்சியும் அற்ற ஒரு தலைமையால் பொது அமைதி எப்படி நிலைகுலையும் என்பதற்குத் தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களே அப்பட்டமான சாட்சி!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.