சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவு சார்பில், சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட எட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு, அனைவரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஜெம் வீரமணி எட்டு வழக்குகளிலும், சாந்தி மூன்று வழக்குகளிலும், மகேந்திரசிம்ஹன் இரண்டு வழக்குகளிலும், லாசர் ஐந்து வழக்குகளிலும், கணேசன் இரண்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சீனிவாசன், சக்திவேல், பாபு மற்றும் பார்த்திபன் ஆகியோர் தலா ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு சிறுமி புகார்:
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் சாட்சியாக இருந்த சிறுமி, தானும் ஜெம் வீரமணியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
காரை அடையாளம் கண்ட போலீசார்:
இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் லாசரை காவல்துறையினர் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், பாலியல் குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற டொயோட்டா கேம்ரி (Camry) கார் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பாக வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்:
குற்ற எண் 11/2026 தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல்:
மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள எட்டு வழக்குகளில், இரண்டு வழக்குகளுக்கான இறுதி அறிக்கைகள் வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மற்ற வழக்குகளிலும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




