இந்திய விமானப்படை (IAF) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தச் சாதனை குறித்த தகவலைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் பகிர்ந்துள்ளது. அதில், 13,629 அடி உயரத்தில் விமானம் தரையிறங்கியது விமானப் போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தச் சாதனை விமானத்தின் செயல்திறனையும், அதனை இயக்கிய விமானப்படை வீரர்களின் திறமையையும் வெளிப்படுத்துவதாகப் பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பணியாளர்களின் திறன், துல்லியம் மற்றும் தொழில்முறை அணுகுமுறையையும் இந்திய விமானப்படை வெகுவாகப் பாராட்டியுள்ளது. இந்த மைல்கல் இந்தியாவின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறனை மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள நியோமா விமான ஓடுதளம், சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகில் இருப்பதால் மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிக உயரத்தில் அமைந்துள்ள இந்த விமான ஓடுதளத்தில் விமானங்களை இயக்குவது மிகவும் சவாலானதாகும். இதற்கு மிகுந்த திட்டமிடலும் துல்லியமான செயல்பாடும் அவசியமாகிறது.
பொதுவாக, அதிக உயரமான பகுதிகளில் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். இதனால் விமானத்தின் இறக்கைகளில் உருவாகும் மேலெழும்பும் விசை (Lift) மற்றும் என்ஜின்களின் செயல்திறன் பாதிக்கப்படலாம். எனவே, இத்தகைய உயரமான இடங்களில் கனரக விமானங்களைத் தரையிறக்குவதும், மீண்டும் புறப்படச் செய்வதும் சவாலான பணியாகும்.
IL-76MD விமானத்தின் சிறப்பம்சங்கள்!
IL-76MD என்பது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நான்கு என்ஜின்களைக் கொண்ட கனரக போக்குவரத்து விமானமாகும். ராணுவ வீரர்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வீரர்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்வதில் இந்திய விமானப்படைக்கு இந்த விமானம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
13,629 அடி உயரத்தில் இந்த விமானம் வெற்றிகரமாகத் தரையிறங்கியிருப்பது அதன் செயல்பாட்டுத் திறனையும், இந்திய விமானப்படை வீரர்களின் பயிற்சி மற்றும் அனுபவத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதனைப் பாராட்டி இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளப் பதிவில், “எல்லைகளைத் தாண்டி, வரம்புகளை மறுவரையறை செய்து, வரலாறு படைக்கிறோம்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.




