கத்தியைக் காட்டி 3 பேரைக் கடத்திய மர்ம கும்பல்

ஓமலூர் அருகே மூன்று பட்டதாரி மாணவர்களை ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் தொட்டியனூர்…

ஓமலூர் அருகே மூன்று பட்டதாரி மாணவர்களை ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் தொட்டியனூர் பகுதியைச் சேர்ந்த பாப்பையனின் மகன் நாகராஜ் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். நாகராஜும், அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் ஒரே கல்லூரியில் ஒன்றாக பி.பி.ஏ படித்து முடித்துள்ளனர். இந்நிலையில், நேற்று சான்றிதழ் வாங்குவதற்காக மேச்சேரி கல்லூரிக்கு நாகராஜ், சண்முகம் மற்றும் கார்த்திக் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து திரும்பி வரும்போது, மேச்சேரி அருகேயுள்ள சந்திரமாள் கடை பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் மூன்று பேரும் டீ குடித்துள்ளனர். அப்போது ஆம்னி கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றுள்ளது. பின்னர் அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, மூன்று பேரையும் காரில் ஏற்றிக் கடத்தி சென்றுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!’

பின்னர், அருகில் உள்ள ஏரிக்குச் சென்ற அந்த கும்பல், மூன்று பேரையும் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்துத் தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் வெட்டி கொலை செய்வதாகக் கூறியபடி தாக்கியுள்ளார். மேலும், ஜெயிலுக்கு செல்வதெல்லாம் ஒன்றும் புதிதல்ல என்று கூறியபடியே அடித்துள்ளனர். அப்போது அங்கே ஒரு நபர், நான் கடத்தி வரச் சொன்னது இவர்கள் இல்லை எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி வந்து நாகராஜ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து நாகராஜின் தந்தை பாப்பையன் கூறும்போது, எனது மகன் உட்பட மூன்று பேரை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.