மதுரையில் மிளகாய்பொடி, கயிறு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித்திரிந்த ரவுடிகளை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மதுரை வண்டியூர் பகுதியில் சிலர் சந்தேகம்படும் படியான நடவடிக்கையோடு சுற்றி
வருவதாக காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்து, குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய காவல் ஆணையர் பசெந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வண்டியூர் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து சென்ற போது, வண்டியூர் சோதனை சாவடியை அடுத்துள் அய்யனார் கோவில் பகுதியில் பதுங்கியிருந்த 5 பேர் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் அவர்களை சுற்றிவளைத்து பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் நோக்கத்துடன் சுற்றித்திரிந்த வண்டியூரை சேர்ந்த அஜய், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜெகன், லோகேஸ்வரன், மனோஜ்குமார் முனிச்சாலை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து வீடுகளில் கொள்ளையடிக்க பயன்படுத்துவதற்காக வைத்திருந்த மிளகாய்பொடி, கயிறு, ஒரு கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.








