கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!

ராமநாதபுரத்தில், அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியைக் கடத்தி அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாசி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் மீரான் என்கிற…

ராமநாதபுரத்தில், அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியைக் கடத்தி அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாசி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் மீரான் என்கிற கண்ணு வாப்பா (வயது 22). சென்னை மண்ணடியில் தங்கி வெளிநாட்டுப் பொருட்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாரிமுனையில் உள்ள அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் அவர் உணவருந்தச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஷேக் மீரானை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் கடத்தப்பட்ட மீரான் அவரது தந்தை கலீலுக்கு போன் செய்து அண்ணன் தரவேண்டிய பணத்துக்காகத் தன்னை அடையாளம் தெரியாத சிலர் கடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கலீல் ரஹ்மான் தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘’ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்’ – முதலமைச்சர்’

விசாரணையில், ஷேக்மீரானின் அண்ணன் நூருல் ஹக் என்பவர் ரூ. 40 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதால் அந்த பணத்தைக் கேட்டு ஷேக்மீரான் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, போலீசார் கடத்தல் ஆசாமிகளின் செல்போன் எண்ணை வைத்துத் தேடிவந்துள்ளனர். அதனையடுத்து மண்ணடி முத்துமாரி செட்டித்தெருவைச் சேர்ந்த முகமது ராவுத்தர், புதுக்கோட்டை மீமிசலைச் சேர்ந்த முகமது ரிபாய்தீன், விஜயன், லட்சுமணன் ஆகிய 4 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

4 பேர் உள்பட மொத்தம் 6 பேர் சேர்ந்து மண்ணடி முத்துமாரி செட்டி தெருவில் அடைத்து வைத்து ஷேக்மீரானை அடித்து உதைத்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அங்குப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பானங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அப்பாஸ் மற்றும் மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.