இரவு நேரத்தில் வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதிய, கடப்பாறையால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகையெல்லாம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் ஜெயமணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமான இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் சென்னிமலையிலும், மகன் கோவையிலும் வசித்து வருகின்றனர். துரைசாமி, ஜெயமணி மட்டும் உப்பிலிபாளைத்தில் உள்ள அவர்களது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
சம்பவ நாள் அன்று, துரைசாமியும், ஜெயமணியும் வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு, வீட்டின் வாசலில், உறங்கியுள்ளனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில், உறங்கிக்கொண்டிருந்த துரைசாமியின் முகத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். ஜெயமணியின் கழுத்தை அறுத்து, கழுத்தில் இருந்த தாலி கொடியை பறித்துள்ளனர்.
பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த பணத்தையும், துரைசாமி அணிந்திருந்த மோதிரம் என 15 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். துரைசாமியின் வீட்டில் பால் எடுக்க, பால்காரர் அதிகாலை வந்தபோது, வீட்டின் வாசலில் துரைசாமி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதையும், ஜெயமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூச்சல்போட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு உயிரிழந்த துரைசாமியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜெயமணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பிறகு சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.
கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில், மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகள் துரைசாமியை கடப்பாறை கம்பியால் முகத்தில் தாக்கி, கத்தியால் வெட்டிய காயங்களும் காணப்பட்டது. கொலையாளிகள் பயன்படுத்திய கடப்பாறையை போலீசார் கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்டைகள் அமைத்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.








