முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்..!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்து ஆடுவதாக குற்றம் சாட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு, மதுரை சித்திரை திருவிழா, விநாயகர் சதுர்த்தி, தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் நினைவு நாள், திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா, தைப்பூச திருவிழா, திருவாரூர் தேர் திருவிழா என அனைத்து விழாக்களும் எவ்வளவு அமைதியாக சுமூகமாக நடைபெற்றது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.

சாதி மோதல்கள், மதக் கலவரங்கள், போலீஸ் துப்பாக்கி சூடு, ரயில் கொள்ளையர்கள், வட மாநில கொள்ளையர்கள் அட்டகாசம், தொழிற்சாலை போராட்டங்கள் என சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் திராவிட மாடல் ஆட்சியில் முறையாக தடுக்கப்பட்டு தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 2020ல் 1 லட்சத்து 68 ஆயிரத்து 629 ஆக இருந்த மதுவிலக்கு வழக்குகள், தற்போது 1 லட்சத்து 55 ஆயிரத்து 486 ஆக குறைந்துள்ளது. கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் 2019ல் 1,678 ஆக இருந்த நிலையில், தற்போது 1,597 ஆக குறைந்துள்ளது. பெண்கள், சிறுமி கடத்தல் போன்ற வழக்குகள் 2018-ல் 907 ஆக இருந்த நிலையில் தற்போது 535 ஆக குறைந்துள்ளது. சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை இயக்குநர் தலைமையில் பெருநகர சென்னை காவல் இயங்கி வருகிறது. 5 கூடுதல் காவல் ஆணையாளர்கள், 7 காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் 31 காவல் துண ஆணையாளர்கள் ஆகியோர் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். 102 உள்ளூர் காவல் நிலையங்கள், 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 24 தனி பிரிவுகளுடன் 23,791 காவல் ஆளிநர்கள் பெருநகர சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். பெருநகர சென்னை காவல்துறையில் 7 காவல் நிலையங்கள் மதிப்புமிக்க ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளன. நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் சீரிய காவல் பணி ஆகியவற்றின் காரணமாக சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறைகளை சொல்லுங்கள். ஆனால் ஆதாரத்துடன் சொல்லுங்கள். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியமைந்த பிறகு காவலர்களிடம் மூன்று முறை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்படவில்லை என தெரிவிக்க, அதற்கு முதலமைச்சர் எதாவது தவறுகள் நடந்திருந்தால் தான் மாற்றப்படுவார்கள். தூக்கியடிப்பது, பழிவாங்குவது, அரசியல் ரீதியாக செயல்படுவது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்காது. வேண்டுமென்று திட்டமிட்டு எந்த அதிகாரிகளையும் மாற்றவில்லை என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அந்த தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர். தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி காவல்துறையில் புகார் அளித்தோம், ஆனால் காவல்துறை வழங்கவில்லை என முன் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த முதலமைச்சர் அது உட்கட்சி விவகாரம் , வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம். உள்ளே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என கூறினார்.

இதையடுத்து கொடநாடு வழக்கு தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா, சாதாரண நபர் அல்ல, முதலமைச்சராக இருந்தவர். அவர் இருந்த கொடநாடு பங்களாவில் சம்பவம் நடந்தது வேதனைக்குரியது. குற்றவாளியை நிச்சயம் கண்டுபிடிப்போம் என கூற, அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாங்களும் கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த இடமல்ல, தனியாருடையது. ஏதேதோ ரூபத்தில் மிரட்டி பார்க்கிறார்கள். எதுவும் நடக்காது. எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை என பேசினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram