மதுரை சித்திரை திருவிழாவை ஒளிப்பதிவு செய்வது குறித்து தெளிவான முடிவுகளை கோயில் நிர்வாகம் இதுவரை அறிவிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 5 -ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், கொடியேற்றத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மதுரை சித்திரை திருவிழாவை ஒளிப்பதிவு செய்வது குறித்து இதுவரை தெளிவான முடிவை கோயில் நிர்வாகம் அறிவிக்கவில்லை. மேலும், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு தர வேண்டிய அனுமதி அட்டையும் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
கோயிலுக்கு வருவாய் தரும் டெண்டர் முறை குறித்தும் எந்த தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு டெண்டர் முறை மூலம் ஒளிப்பதிவு உரிமம் தரப்பட்டிருந்தது. திருவிழா தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், ஒளிப்பதிவு குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டும் பதில் தரவில்லை.
சித்திரை திருவிழாவினை ஒளிப்பதிவு செய்ய இதுவரை எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. சித்திரை திருவிழா ஒளிப்பதிவு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ஒளிப்பதிவு உரிமம் வழங்குவதில் சட்டவிதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமல்படுத்தப்படவில்லை.








