அயலான் படத்தில் தான் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அயலான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு 2024 பொங்கல் வெளியீடாக வெளிவரும் என அறிவித்துள்ளது. அயலான் டீசர் வெளியிட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், “படம் முதல் பாதி நகைச்சுவையாக இருக்கும். இரண்டாம் பாதி வேறு விதமாக இருக்கும். இந்தப்படம் 20 வருடம் கழித்து ரிலீஸ் ஆனாலும் நன்றாக இருக்கும். ஏனெனில் இந்தப் படத்தின் கதை அந்த மாதிரியிருக்கும்.
‘இன்று நேற்று நாளை’ படம் மிகவும் பிடிக்கும். பின்னர் அவருடன் பேசினேன். அவர் கதை சொல்வதற்கு முன்னமே அவரது படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன். ஏனெனில் அவரது திறமை மீதும் அவர் பழகும் விதமும் பிடித்திருந்தது. 95 நாள்களில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த மாதிரி ஏலியன் படத்தினை எம்ஜிஆர் எடுக்க முயற்சித்துள்ளார். அதற்கடுத்து நான்தான். எம்ஜிஆருக்கு அடுத்து நான்தான் என யூடியூபர்கள் தலைப்பு வைக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.
மற்றுமொரு நற்செய்தி-மீண்டும் இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். பணப்பற்றாக்குறையால் இந்தப்படம் ஒருமுறை பிரச்னையில் சிக்கியது. அப்போது நான் சம்பளம் வாங்காமல் நடித்து முடித்துக் கொடுக்கிறேன் என்றேன். பணத்தைவிட நான் சம்பாதித்த சொத்து இயக்குநர் ரவிக்குமார். இவ்வளவு விஎஃப்க்ஸ்களை கொண்ட படமும் இந்த மாதிரி கதையை கொண்ட படமும் இந்திய சினிமாவில் இதுவரை வெளியாகவில்லை என்பதை தைரியமாகவே சொல்லுவேன். அயலான் பொங்கலன்று வருவான் கவருவான்..” எனக் கூறினார்.







