வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை…

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை (22-12-2022) 0830 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 07 துறைமுகங்களிலும், புதுவை, காரைக்கால் துறைமுகங்கள் உட்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 25ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கன மழை காண வாய்ப்புள்ளது.

அத்துடன், டிசம்பர் 26 ஆம் தேதி தேனி தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.