32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம் லைப் ஸ்டைல்

காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”

இன்னைக்கு எனக்கு கெட்ட நாள் தான். இன்னைக்கு காலையிலேயே நான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியதையும், அதில் இருந்து மீண்ட கதையையும் சொல்றேன். நேரமிருந்தா இத படிச்சி பாருங்க…         

வீடியோவாக காண – காகம் மீண்ட கதை   

சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில தான் நாங்க கூட்டமா வாழ்கிறோம். அங்கு உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்ந்துட்டு வரோம். நான் பிறந்து சில மாதங்கள் தான் ஆகிறது. இப்பதான் கொஞ்சம் நல்லா பறக்க கத்துக்கிட்டிருக்கேன். நாங்க உங்களப் போல கிடையாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிறக்கும் போது எங்கள அன்போட பார்த்துக்கொள்ளும் எங்க அம்மா அப்பா, பறக்கத் தெரிந்த உடனேயே அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுடுவாங்க.

நாங்க தான் எங்களுக்கு தேவையான இரையை தினமும் அலைந்து திரிந்து தேடனும்.

அப்படி இன்னைக்கு காலையில எழுந்த உடனேயே நான் அண்ணா நகர் கிழக்கு பகுதியில் இரை தேடப் புறப்பட்டேன். அப்போ அங்கிருந்த தென்னை மரத்தில பட்டம் நூல் சுற்றி இருந்தது எனக்கு தெரியாது. நான் சந்தோஷமா புறப்பட்ட போது, நூல் என் மீது சிக்கிக் கொண்டது.

அதில் இருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாமல் அப்படியும், இப்படியும் நான் பறந்தேன். அப்போ மீச்சமிருந்த நூலும் எம்மேல அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே அந்த தென்ன மரத்திலேயே தலைகீழா தொங்கிட்டேன். எப்படி என்னை காப்பாத்தறதுன்னு தெரியாம நான் சத்தமா கா, கா…ன்னு அழத் தொடங்கினேன்.

உங்களுக்கு எல்லாம் அழத் தெரியுமா என்று நீங்க கேட்கறது புரியது. நாங்களும் அழுவோம். ஆனால்

அதை கேட்கவோ, உதவவோ ஆள் தான் இருக்காது. ஆனா இன்னைக்கு நான் அழுது கொண்டிருந்ததைத் பார்த்த பக்கத்து வீட்டில் இருந்த ஒருத்தர் உடனே உதவிக்கு

தொலைபேசியில யாரையோ அழைச்சாரு. கொஞ்சம் நேரத்துல சீருடை அணிந்த சில பேரு வந்தாங்க. அப்போ அவங்க பேசிக்கொண்டிருந்தது இது தான்…

” சார் இது இஞ்சினியர் கண்ணன் வீடு தானே… ஆமா… காக்கா மரத்துல உயிரோட தொங்குதுன்னு சொன்னீங்களே.. அத பார்க்கத் தான் வந்தோம்…
ஆமா சார் ஏதோ நூல் இந்த காக்கா மேல ரொம்ப சிக்கிருச்சி. அதனால தான் பறக்க முடியல. ”

உடனே தீயைணைப்பு ஊழியர்கள் என்னை மரத்தில் இருந்து பத்திரமா மீட்டாங்க. பின்னர் கத்திரிக்கோலால என் மீது சுற்றி இருந்த நூல அகற்றினாங்க. அதன் பிறகும்

என்னால பறக்க முடியலங்க. அதான் சோகம். ஏன்னா காலையில இருந்து சாப்பிடாததாலயும், தண்ணி குடிக்காததாலயும் ரொம்ப சோர்ந்து போயிட்டேன்.

அப்போ தான் ஒரு குரல் வந்தது. இந்த காக்கா பறக்குமான்னு இஞ்சினியர் கண்ணன் மகள் கேட்டாங்க. உடனே அவங்க கையில என்னை தீயணைப்பு படை ஊழியர்கள் கொடுத்தாங்க… 

அந்த கை தான் எனக்கு நம்பிக்கை கொடுத்ததுன்னு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும். ஏன்னா… அவங்க என்ன மீண்டும் பறக்க வைக்க பாத்தாங்க… ஆனா என்னால தான் பறக்க முடியலயே… என்ன செய்ய… உடனே அங்கிருந்தவங்க தண்ணி கொடுத்து பாருங்கன்னு சொன்னாங்க…

அந்த பொண்ணு தண்ணி எடுக்கப் போன நேரத்தில, அண்ணா நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் என் ரெக்கையைப் பிரித்துப் பார்த்து, ஏதாவது நூல் இன்னும் சிக்கி இருக்கான்னு பாத்தாரு… என்ன இவ்ளோ கரக்டா பேரல்லாம் சொல்றன்னு தான யோசிக்கிறீங்கள்…

மயக்க நிலையில இருந்தாலும், அவங்க பேசிக்கினு இருந்தது என் காதுல விழுந்தது. அதான். ரெண்டு ரெக்கையையும் பிரிச்சுப் பிரிச்சுப் பார்த்தாரு..

இஞ்சினியர் பொண்ணும் உடனே தண்ணீ எடுத்துட்டு வந்து என் அலகில கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தாங்க. நானும் அத குடிச்சதால தெம்பு வந்தது.

அப்போது தீயணைப்புத் துறை அதிகாரியும் தண்ணீர எடுத்து எம்மேல தெளிச்சாரு. இதனால எனக்கும் புத்துணர்ச்சி கிடைச்சிது. நானும் கொஞ்சம் கொஞ்சமா ரெக்கைய விரிச்சு பறக்கத் தொடங்கினேன். எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வரத் தொடங்கிச்சி… பின்னர் துள்ளித் துள்ளி பறக்கத் தொடங்கினேன். அங்கிருந்தவர்களும் என்னை ஊக்குவிச்சாங்க. நானும் சந்தோஷமா பறந்து போயி என்ன தொங்கவிட்ட மரத்துலயே கெத்தா உக்கார்ந்து, தீயணைப்புத் துறையினருக்கும், காப்பாற்ற உதவிய இஞ்ஜினியர் மற்றும் அவருடைய பொண்ணுக்கும் நன்றி சொன்னேன்.

இதையும் பாருங்கள் – காத்தாடி நூலில் சிக்கி மீண்ட காகம் 

இதுல நான் உங்களுக்கு எல்லாம் சொல்ல வர்றது ஒன்னுதான்.

எனக்கு ஆபத்த ஏற்படுத்தினதும் நீங்க தான். என்னை காப்பாத்தினதும் நீங்க தான்.

இருந்தாலும், இந்த கதையை நான் உயிரோட இருக்குறதால தானே சொல்ல முடியுது. இல்லன்னா என் கதை முடிஞ்சிருக்கும். அதனால அனைத்து உயிர்கள் மேலயும் அன்பு வைக்கணும்னு சொன்னதைப் போல, எங்க மேலே அன்பு இருந்தா தயவு செய்து பட்டம் நூல இப்படி அறுத்துவிடாதீங்க. சில பேரு இந்த பட்டம் நூல் அறுத்து செத்துப்போன கதையைக் கூட, என்னை மீட்ட போது அந்த தீயணைப்பு அதிகாரி சொன்னாரு… அதனால கவனமாக இருங்க… நன்றி… அத்தோட

மொட்டை மாடி வச்சிருந்தா, கொஞ்சம் எங்களுக்காக தினமும் தண்ணி வைங்க.. நகரத்துல தண்ணி தேடறதுதான் இரை தேடறதவிட கஷ்டமா இருக்கு…

சரி சரி… நான் இன்னும் ஒழுங்கா சாப்பிடல… இப்போ போயிட்டு வரேன். அத்தோட இன்னைக்கு பொறியாளர் தினமாம் (Engineer’s Day) … அவருக்கு ஒரு வாழ்த்தயும் சொல்லிடறேன்…. அப்புறம் அமாவசை அன்னிக்கு வட பாயாசத்தோட இன்ஜினியர் வீட்டுக்கு போய் அவர சந்திக்குறேன்…

-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

“எது வேண்டுமானாலும் பேசலாமா”: சாட்டை துரைமுருகன் வழக்கில் கேள்வி

EZHILARASAN D

மலை உச்சியில் பூஜை: தவறி விழுந்து உயிரிழந்த பூசாரி

Gayathri Venkatesan

யூரோ கால்பந்து போட்டி: மைதானத்தில் நிலைகுலைந்த டென்மார்க் வீரர்!

Gayathri Venkatesan