கட்டுரைகள்

இந்திய பொறியியல் துறையின் பிதாமகன்


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

பொறியியல் துறையில் பெரும் பங்காற்றிய பெரியவர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள், நம் நாட்டில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

160 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கர்நாடகாவின் முட்டனஹல்லியில் பிறந்தாலும், இவரது குடும்பத்தின் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள மோக்சகுண்டம் என்பதால், ஊரின் பெயருடன் சேர்த்து மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என அழைக்கப்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், பொறியியல் துறை மீதான காதலால், அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய புனே அறிவியல் கல்லூரியில், சிவில் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து இரண்டாவது பட்டத்தை பெற்றார்.

புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட விஸ்வேஸ்வரய்யா, அணைகள், நீர்த்தேக்கங்களில் தானியங்கி வெள்ள மதகு, நீர் பாசனத்தில் புதிய முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். அவர் வடிவமைத்த இயந்திரங்களின் உதவியால், புனே அருகேயுள்ள கடக்வத்சலா நீர்த்தேக்கத்தில் அதிகளவு நீரை தேக்க முடிந்தது, அவ்வூரில் விளைச்சலும் அதிகரித்தது. இத்திட்டம் மைசூரில் காவிரி ஆற்றின் குறுக்கே விஸ்வேர்வரய்யா கட்டிய கிருஷ்ணராஜ சாகர் மற்றும் குவாலியரில் டிக்ரா அணையிலும் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றார் விஸ்வேஸ்வரய்யா. மேலும், 1894-ம் ஆண்டு மைசூருக்கு அருகில், ஆசியாவின் முதல் நீர் மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க முக்கியப் பங்காற்றினார். இவ்வாறு, நீர் மேலாண்மை மற்றும் வெள்ளப் பேரிடர் தடுப்பு நிபுணராக விளங்கிய விஸ்வேஸ்வரய்யாவின் புகழ், மெல்ல மெல்ல வெளிநாடுகளிலும் பரவத் தொடங்கியது. இதனிடையே, 1912-ல் மைசூர் மன்னரின் அரண்மனையில், திவான் பதவி அவரைத் தேடி வந்தது. சுமார் 7 ஆண்டுகளாக அப்பணியில் இருந்த அவருக்கு, 1915-ல் இங்கிலாந்து ஜார்ஜ் மன்னரின் “நைட்” பட்டம் வழங்கப்பட்டது.

விஸ்வேஸ்வரய்யா தான் சார்ந்த துறையில் மட்டுமின்றி, புகழ்பெற்ற மைசூர் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதிலும் முனைப்புடன் செயல்பட்டவர். பெங்களூருவில் பொறியியல் கல்லூரி, வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றையும் நிர்மாணித்தார். நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், 1955-ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கியது மத்திய அரசு. அப்போது பிரதமர் நேருக்கு கடிதம் எழுதிய விஸ்வேஸ்வரய்யா, “பாரத ரத்னா வழங்குவதன் மூலம், நான் உங்கள் அரசை புகழ்வேன் என எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாந்துபோவீர்கள்” என குறிப்பிட்டிருந்தார். விஸ்வேஸ்வரய்யாவின் நேர்மையால் ஈர்க்கப்பட்ட நேரு, அவருக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், விருதை ஏற்றுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியிருந்தார். அதுமுதல் விஸ்வேஸ்வரய்யாவுக்கும் நேருவுக்கும் இடையிலான நட்பு மேலும் பலம்பெற்றது.

இவ்வாறு கடைசி காலம் வரை, நேர்மையாகவும் தனது அதிகாரத்தை எந்த வகையிலும் தவறாக பயன்படுத்தாத விஸ்வேஸ்வரய்யா, முதுமையிலும் உழைப்பின் சிகரமாக விளங்கினார். இதுகுறித்து அவரே நகைச்சுவையாக கூறுகையில், “மரணம் என்னை தேடி வரும்போதெல்லாம், நான் வீட்டில் இருப்பதில்லை. அதனால், ஏமாந்து திரும்பிச் சென்று விடுகிறது” என குறிப்பிட்டார். 1962-ல் தனது 101-வது வயதில் மூத்தப் பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா காலமானார்.

தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்ட அந்த மாபெரும் பொறியியலாளரின் பங்களிப்பை, இந்த தேசம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும், நாட்டின் வளம் மற்றும் வளர்ச்சியை கட்டமைப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் பொறியாளர்களை போற்றும் வகையிலும், விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

எம்ஜிஆருக்கு முதல் வில்லன்

Halley karthi

உதயநிதி ஸ்டாலின்: மக்களின் ‘நண்பேன்டா’

ஆடுகளத்தில் அசத்தும் ஸ்மிருதி மந்தனா

Gayathri Venkatesan