பேருந்தினுள் இருந்த ஓட்டையில் சிறுமி தவறி விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8பேரையும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி சுருதி பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து கொடூரமான முறையில் உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளிக்கு சொந்தமான பேருந்து பழுதான நிலையில் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் எஃப்.சி. வழங்கப்பட்ட செய்தி வெளியாகவே, இப்பிரச்சினையைத் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பேருந்தின் ஓட்டுநர், கிளீனர் சிறுவன், ஒப்பந்தக்காரர் யோகேசுவரன், பள்ளித் தாளாளர் விஜயன், பேருந்துக்கு சான்றிதழ் தந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கட்டுப்பாடின்றி வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தைச் சரியாகப் பராமரிக்காதது, பராமரிப்பற்ற வாகனத்தைப் பயன்படுத்துவது, கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை இழைத்தது ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் இவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த துயர சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி காயத்ரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போதிய ஆதாரமில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.
– யாழன்