கோவில்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சக காவலர்கள் இணைந்து குலவையிட்டு , சீர்வரிசை அணிவித்து நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு . இச்சடங்கினை சீமந்தம் என்றும் அழைப்பார்கள். அப்படிப்பட்ட இந்த சடங்கானது முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம், 7ஆம் மாதம், 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்து மகிழ்வது வழக்கம். அப்படியான ஒரு நிகழ்வு குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து, உடன் பணியாற்றுபவர்கள் செய்து அசத்தியிருப்பது பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிழக்கு காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டராக, அதாவது உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அருள்மொழி. இவரது கணவர் சதீஷ்குமார் கழுகுமலை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு இப்போதுதான் குழந்தை பிறக்கப்போகிறது . தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள அருள்மொழிக்கு காவல் நிலையத்திலேயே சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மாவதி, சுஜீத் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் அருள் மொழிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் அருள்மொழிக்கு சக காவலர்கள் வளையல்கள் அணிவித்தும் சந்தனம் குங்குமம் வைத்தும் மகிழ்ந்தனர்.
மேலும் அவருக்கு சீர்வரிசை கொடுத்தும், விருந்து உபசாரம் நடத்தியும் ஒரு குடும்ப நிகழ்ச்சியைப் போல் வெகு சிறப்பாக செய்து முடித்துள்ளனர். காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளர்க்கு டிஎஸ்பி முதல் காவலர் வரை அனைவரும் பாசத்துடன் வீடுகளில் குடும்பத்தினர் நடத்துவது போன்றே வளைகாப்பு நடத்தியிருக்கும் நிகழ்வு பார்ப்பவர்களை மட்டுமின்றி பெண் காவலர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.