இஸ்ரோ உளவு வழக்கில் தொடர்புடைய முன்னாள் குஜராத் மாநில டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் உளவுத்துறை அதிகாரிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கூறி, கடந்த 1994ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கேரள போலீசாரால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், எந்த ஆதாரமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு நிவாரண நிதி வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் சிலரை திட்டமிட்டு சிக்க வைத்தது தெரிய வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. பின்பு உச்சநீதிமன்றம் இவர்களுக்கான முன் ஜாமீனை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே வேளையில் நான்கு பேரையும் கைது செய்வதிலிருந்து 5 வாரங்களுக்கு விலக்கு அளித்தது. இவர்களுக்கான முன் ஜாமீனை கேரள உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், முன்னாள் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளார். அதில், இந்திய விண்வெளி திட்டத்தின் முக்கிய அம்சமான கிரைரோஜெனிக் இன்ஜின் வளர்ச்சியை தடுக்கும் விதமாகவே 1994ம் ஆண்டு என்னுடைய கைது நோக்கமாக இருந்திருக்கிறது. இதற்கு பின்னணியில் யார் இருந்தார்கள்?. இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.