புதுச்சேரியில் திடீரென சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம்!

புதுச்சேரியில் புதிதாக கட்டிய வீடு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.  புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி.  இவர் கணவர் உயிரிழந்த நிலையில்,  தனது மகள் சித்ரா மற்றும்…

புதுச்சேரியில் புதிதாக கட்டிய வீடு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தி உள்ளது. 

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி.  இவர் கணவர்
உயிரிழந்த நிலையில்,  தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.  இவர் அதே பகுதியில்,  அரசு இலவசமாக கொடுத்த  இடத்தில் 3 மாடி வீடு கட்டி வந்துள்ளார்.  இந்த வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த மாத இறுதியில் புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி
கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இதனால் சாவித்திரி வீட்டருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது.  இதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு லேசாக சாய்ந்தது. அதிர்ச்சி அடைந்த சாவித்திரி இது தொடர்பாக வாய்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று (ஜன.22)வீடு மிக மோசமாக சாய்ந்து காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்  ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்துள்ளனர்.  அப்போது வீடு முற்றிலுமாக சரிந்து விழுந்தது.   இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதையும் படியுங்கள்: அரசியல் கலந்த ஆன்மீகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்கிறார் – அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு!

வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஆய்விற்கு பிறகே அதிக உயரத்தில் தரமின்றி கட்டப்பட்டதால்  வீடு சரிந்து விழுந்ததா அல்லது வாய்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் மூன்று மாடி கட்டடம் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.