சொந்த தந்தை மற்றும் அண்ணன் முறை கொண்டவரால் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவண்ணாரப் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜான்சி மேரி. இவருக்கும் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் ஜான்சி மேரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இரண்டாவது மகளான 13 வயது சிறுமியை தந்தையின் பொறுப்பில் விட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிறுமி தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சிறுமியின் தந்தை ஜான்சிமேரியிடம் சண்டையிட்டுள்ளார். அவ்வழியாக ரோந்து பணியில் வந்த இராயபுரம் போலீசார் ஒருவர் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து சிறுமி தனது தந்தையும், தனது பெரியப்பாவின் மகனான அண்ணன் முறை கொண்டவராலும் தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து முதல் முறையாக தாயிடம் வாய்விட்டு கதறி அழுது கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் பெண் ஆய்வாளர் வரலட்சுமி புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பேசிய ஜான்சிராணி,
“கடந்த திங்கட்கிழமை காலை திருவொற்றியூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன். ஆனால் புகாரை ஏற்று கொள்ள மகளிர் போலீசார் மறுத்தனர். காவல் ஆய்வாளர் இல்லை என கூறிவிட்டனர். தொடர்ந்து நான் நான்கு நாட்களாக காவல் நிலையம் சென்றேன். ஆனால் காவல் ஆணையர் உள்ளே இருந்தாலும் இல்லை என கூறி வழக்குப்பதிய மறுத்தனர். சிறுமியின் தந்தையும், அண்ணனும் மன்னிப்பு கேட்டு விட்டார்கள். அதனால் மன்னித்து விடு என சமரசம் செய்ய முயன்றனர். புகார் பேப்பரை கேட்டதற்கு அதனை தூக்கி வீசினர்.
இதுவரையும் இது சம்பந்தமாக யாரையும் கைது செய்யவில்லை. அவர்கள் இருவருக்கும் கண்டிப்பாக தண்டனை அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.







