பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த மனு உல்லா குடும்பத்தினர், தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, அஜிஸியா தெருவில் உள்ள, வேறொரு கட்டடத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில், இடம்பெயர்ந்து தங்கியிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மன்னன், மணு உல்லா, அனிஷா, கெளசர், அஃப்ரா, மிஸ்பா பாத்திமா உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், கனமழையால் வீடு இடிந்து, 4 குழந்தைகள் மற்றும் 5 பெண்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வருத்தமடைந்ததாகத் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.








