தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்ச ருமான சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராகவே சட்டப்பேரவைக்குள் நுழைவேன் எனக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால் , தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறினார். ’கடந்த இரண்டரை வருடமாக அவமானங்களை பொறுத்துக்கொண்டு அமைதிகாத்தேன். ஆனால், என் மனைவியையும் அவதூறாக பேசுகிறார்கள். நான் எப்போதும் மரியாதையுடனும் மரியாதைக்காகவும் வாழ்ந்துவருகிறேன். இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். முன்னாள் முதலமைச்சரான அவர் கண்ணீர் விட்டதை, ஆளும் கட்சியினர் நாடகம் என்று கூறியுள்ளனர்.








