ஒலிம்பிக் போட்டி கட்டுரைகள்

கருணாநிதியின் நீட்சி மு.க.ஸ்டாலின்


விக்னேஷ்

கட்டுரையாளர்

அரசியல் பேசுவதை தவிர்த்து மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை மட்டுமே சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுருத்தல் தமிழ்நாட்டின் புதிய அரசியல் பயணத்திற்கான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் முதலமைச்சரின் அணுகுமுறை மற்றும் அவர் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

2017 ஜூன் 14, தமிழ்நாடே போராட்டக்களமாக காட்சியளித்த நாள். அன்றைய தினம் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பணம் வாங்கியது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்த அப்போதய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். தலைமைச் செயலகம் முன்பாக சாலைமறியல், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் என தமிழ்நாடே போராட்டக்களமாக காட்சியளித்தது. அப்போது கோவத்தின் உச்சத்தில் இருந்த திமுகவினர் உதித்த வார்த்தைகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினர் இருக்கும் இடம் தெரியாது என்பது தான். ஆனால் தற்போது நடந்து வரும் ஆட்சி பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது காழ்புணர்ச்சியோ இல்லாமல் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி வருவது அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.

பொதுவாக சட்டப்பேரவையில் பேசும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடந்த ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டுகளை வைப்பதும் அதற்கு விளக்கத்தை அளிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. சட்டமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெறும் அரசியல் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதால் அதன் மூலம் நடைபெறும் விவாதங்கள் மற்றும் காலவிரயமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்பி அதற்கான தீர்வையும் காண முடிகிறது.

நேரத்தின் அருமைகருதி கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும் போதும் தலைவர்களை புகழ்வதை தவிர்க்க வேண்டும் என்று உரிமையுடன் கண்டித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சில உறுப்பினர்கள் தொடர்ந்து தலைவர்களை புகழ்வதை கண்ட முதல்வர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுத்ததால் சட்டமன்றமே அதிர்ந்தது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது எழுப்பும் கேள்விகளுக்கு அடிக்கடி குறுக்கிட வேண்டாம் எனவும் அதற்கான பதிலை பதிலுரையின் போது வழங்க வேண்டும் என்ற அறிவுருத்தலையும் அமைச்சர்களுக்கு முதல்வர் வழங்கியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை போலவே ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக நேரம் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கி அதற்கு முறையான பதிலை வழங்குவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதில் வழங்கும் அமைச்சர்கள் கவனக்குறைவால் கடுஞ்சொற்களை பயன்படுத்தினாலும் அதனை உற்றுநோக்கி அமைச்சர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அந்த வார்த்தைகளை திரும்ப பெற வைப்பதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக விளக்குகிறது.

கலைஞருக்கு நினைவிடம், இலங்கை தமிழர் நலன், சமூகநீதி போராட்ட தியாகிகள் மற்றும் அயோத்தி தாசருக்கு மணிபண்டபம், உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிடுவதோடு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் பிறந்தநாளை ஓராண்டுக்கு கொண்டாடும் வகையில் 14 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்வதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் மறைவு செய்தி அறிந்ததும் அவை நடந்து கொண்டிருந்தாலும் கூட உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் அளித்தது அவர் பின்பற்றும அரசியல் நாகரீகத்தை எடுத்துரைக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

சவால்களை சமாளிப்பாரா பசவராஜ் பொம்மை

Ezhilarasan

இந்திய ராணுவத்தின் ராஜாளி: ரஃபேல் ஓராண்டு நிறைவு

தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்?

Ezhilarasan